வெந்தையக் கீரை வளர்க்கலாம் வாங்க

உடலுக்கு குளிர்ச்சியையும், பெண்களுக்கு ஏற்றதுமான வெந்தையக் கீரையை எவ்வாறு எளிதில் எந்த செலவும் இன்றி வளர்க்கலாம் என்று பார்க்கலாம்.

முதலில் வீட்டில் இருக்கும் வெந்தையத்தை ஒரு ஸ்பூன் அளவு எடுத்துக்கொள்ளவும். வெந்தயத்தை நேரடியாகவும் அப்படியே எடுத்துக்கொள்ளலாம் அல்லது எட்டு மணிநேரம் ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம்.

ஏதாவது ஆழம் (5cm) குறைவாக இருக்கும் ட்ரேயை முதலில் எடுத்துக்கொள்ளவும். சாதாரணமாக கடைகளில் வாங்கும் இனிப்பு டப்பாக்களை எடுத்துக்கொள்ளலாம். அதன் அடியில் மூன்று அல்லது நான்கு சிறு சிறு துளைகள் போட்டுக்கொள்ளவேண்டும்.

அனைத்து பெருநகரங்களிலும் வீட்டருகில் செம்மண் கிடைக்கும் அதனைப் பயன்படுத்தலாம் அல்லது புல், செடி கொடிகள் முளைத்திருக்கும் மண்ணை பயன்படுத்தலாம். இவற்றில் ஏதாவது ஒரு வகை மண்ணை பெற்று அதனுடன் தோட்டக்கலை துறையில் கிடைக்கும் மண்புழு உரத்தினையும் சமமாக சேர்க்கவும். இவற்றுடன் வீட்டருகில் கிடைக்கும் காய்ந்த இலைதழை, சருகுகள் ஒருபங்கையும், அதனுடன் மணல் அல்லது தேங்காய் நார் அல்லது கரும்பு சக்கை ஒரு பங்கினையும் சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து நம்மிடம் இருக்கும் ட்ரேயில் முக்கால் பங்கு நிரப்பவும்.

மண்ணில் கோலமிட புள்ளிகள் வைப்பதைப்போல் 1cm இடைவெளிவிட்டு நேராகவும், வரிசையாகவும் புள்ளிகளை வைக்கவேண்டும்.

பின் அந்த புள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று வெந்தயத்தை இடவேண்டும்.

பின் அந்த புள்ளிகளில் இரண்டு அல்லது மூன்று வெந்தயத்தை இடவேண்டும்.

இவ்வாறு முழுவதுமாக நிரப்பியபின் அதற்கு மேல் மண்ணைத் தூவி சிறிது தண்ணீர் தெளித்து சற்று நிழல் பாங்கான இடத்தில் வைக்கவேண்டும்.

தினமும் காலையும், மாலையும் இதற்கு தண்ணீர் தெளிக்க பத்து முதல் பதினைந்து நாட்களில் வெந்தையக்கீரை முளைத்து அறுவடைக்கு தயாராகிவிடும்.

பொதுவாக எந்த பூச்சி தாக்குதலும் இதற்கு ஏற்படாது. தேவைபட்டால் வேப்ப எண்ணெய் கரைசல், வேப்ப விதை கரைசல் அல்லது பசு சிறுநீர் கரைசல் தெளிக்கலாம்.

வீட்டில் விளைந்த இந்த கீரையை கூட்டாக செய்தும் உண்ணலாம் அல்லது அன்றாடம் குழம்பு, பொரியல், கூட்டு போன்றவற்றிலும் இறுதியில் சிறிதளவு சேர்க்கலாம்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த கீரை இருக்கும். அவர்கள் இதனை ஒரு பானமாக தயாரித்து பருக விரைவில் பலன் தெரியும். இந்த பானத்தை தயாரிக்கும் முறையை கீழிருக்கும் காணொளியில் காணலாம்.

https://www.youtube.com/watch?v=mawc99bSLUM

எந்த செலவும், இரசாயனம், பூச்சிகொல்லி விசங்களும் இல்லாமல் புதிதாக விளைந்த இந்த வெந்தயக்கீரை சுவையானதாகவும், சத்தானதாகவும் இருக்கும். சிறிதளவு கீரையே பல நோய்களுக்கு மருந்தாக அமைகிறது. 

கடையில் பணம் கொடுத்து வாங்கும் வெந்தையக் கீரை பல வகையான இரசாயனங்களைக் கொண்டும், நச்சுக்களைக் கொண்டும் விளைகிறது. மேலும் நம்மிடம் அந்த கீரை வருவதற்குள் வாடிப்போய், அழுகிப்போய், காய்ந்து சத்துக்கள் அற்று வருகிறது.

சத்துக்களைவிட நச்சுக்களே அதிகமாகவும் அவை கொண்டிருக்கிறது. ஆனால் நமது வீட்டிலேயே செலவின்றி இருக்கும் பொருட்களை வைத்து முளைத்து வளைந்திருக்கும் இந்த வெந்தையக்கீரை அபாரமான தன்மைகளைப்பெற்று உடலைப் பேணிக்காக்க உதவுகிறது.

உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் கீரை. மலட்டுத்தன்மை, நீரிழிவு, மலச்சிக்கல், உடல் பருமன் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த வெந்தயக்கீரை இருக்கும். எளிமையாக இதனை வீட்டில் வளர்த்து பயன்பெறுவோம்.