tirumurai-tirupathigam

செல்வம் பெற – பலன் தரும் திருமுறை திருப்பதிகம்

நல்வழியில் செல்வம் பெற, பாடவேண்டிய பதிகம்

திருவீழிமிழலை என்ற ஊரில் பஞ்சம் நீங்க இறைவர், திருஞான சம்பந்தருக்கும், திருநாவுக்கரசருக்கும் தினமும் ஒரு படிக்காசினை கிழக்கு, மேற்கில் உள்ள (பலி) பீடத்தில் கிடைக்கும்படி செய்தார். அப்பொற்காசு மாற்று குறையாமல் திருநாவுக்கரசர்க்கு கிடைத்ததால் மிகச் சரியான நேரத்தில் அவரது மடத்தில் உணவு வழங்கப்பட்டது. சம்பந்தருக்கு வழங்கிய காசு மாற்று குறைவாக இருந்தமையால் சற்று நேரம் தாழ்ந்து உணவு வழங்கப்பட்டது. இதன் உண்மையை உணர்ந்த சம்பந்தர் தொண்டின் திறத்தாலே திருநாவுக்கரசர்க்கு தூய்மையுடைய காசு கிடைக்கப்பெற்றதை அறிந்து இறைவனிடம் தன் பொருட்டு வழங்கும் காசின் வாசி (மாற்று) தீர “வாசி தீரவே காசு நல்குவீர்” எனத் தொடங்கும் பதிகம் பாட இறைவன் வாசி நீங்கப்பெற்ற காசினை வழங்கினார். நல்வழியில் பெறும் பணம் மட்டுமே நமக்கும் நம் வாரிசுகளுக்கும் நன்கு பயன்படும். இத் திருப்பதிகத்தை நம்பிக்கையுடன் பாடிவர வறுமை நீங்கி செல்வம் பெருகும்.

tirumurai-tirupathigam

திருவீழிமிழலை

திருமுறை : 1/92

இறைவன் : விழியழகர் – சுந்தரகுசாம்பிகை

பண்: குறிஞ்சி

திருச்சிற்றம்பலம்

வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே. 1

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. 3

நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே. 4

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாமம் மிழலையீர், சேமம் நல்குமே. 5

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. 7

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே. 9

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. 10

காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே. 11

திருச்சிற்றம்பலம்