முயல் காது இலை – நம் மூலிகை அறிவோம்

Kleinia grandiflora; முயல் காது தழை

கிராமப்புறங்களில் பார்க்கக்கூடிய ஒரு மூலிகை இந்த முயல் காது இலை. வேலி ஓரங்களிலும், ரயில் தண்டவாள ஓரங்களில், வயல்வெளிகளில் நீண்ட காம்புடன் பல இலைகளுடன் இது படரும். இதன் இலைகள் முயல் காது போல இருப்பதால் இதை முயல் காது இலை என்று கூறுகின்றனர். மொசக்காதிலை என்றும் பேச்சு வழக்கில் கூறுவதுண்டு. இது சுமார் ஐந்து சென்டி மீட்டர் அகலமுள்ள நீள வசத்திலான பூக்களைப் புஷ்பிக்கும். ஊதா நிறத்தில் உள்ள இந்த பூக்களை காண்பதற்கு அழகாக இருக்கும்.

காண்பதற்கு அழகாக இருக்கும் இந்த முயல் காதிலை சில மருத்துவ குணங்களையும் கொண்ட ஒரு மூலிகை. முயல்காதிலை மூலிகையின் வேர் ஆண்மையைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது. இதன் வேரை நீரில் கொதிக்கவைத்து பக்குவமாக தயாரித்து பயன்படுத்த ஆண்மை பெருகும்.

உடலில் ஏற்படும் எந்த வகையான வீக்கத்தையும் வாட வைக்கும் சிறந்த மூலிகை. எந்த வகையில் ஏற்பட்ட வீக்கமாக இருந்தாலும் முயல் காதிலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு இரண்டு தேக்கரண்டியளவு வேப்ப எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி வீக்கத்தின் மேல் வைத்துக் கட்டி வர வீக்கம் வாடிவிடும்.

(1 vote)