மாமருந்தாகும் பசு நெய்

இருபது வருடங்களுக்கு முன் வெளிநாடுகளில் இருந்து வரும் நமது உறவினர்களின் குழந்தைகளிடம் பால், காய்கறிகள் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் கடைகளில் இருந்து என்று பதில் கூறுவார்கள்.

அன்று நம்ம ஊர் குழந்தைகளுக்கு அவை மாடுகளில் இருந்தும், செடிகளில் இருந்தும் பெறப்பட்டது என்று நன்கு தெரியும். வெளிநாட்டு குழந்தைகளுக்கோ அவர்களுடைய வாழ்வியல் சூழலாலும், வளர்ப்பாலும், தங்களின் அறியாமையாலும் அவ்வாறு கூறுவதனை நம் ஊராரும், குழந்தைகளும் பெருமையாக அன்று கருதினர். 

அரிசியும் பருப்பும், பாலும் காய்கறிகளும் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமல் (தெரிந்து கொள்ளாமல்) அக்கம் பக்கத்தில் இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு பொத்தானை அழுத்தினால் கிடைக்கும் என்று நினைப்பதனை நவீன பெற்றோரும் பெருமையாக நினைத்தனர்.

பச்சிளம் குழந்தைகளின் இந்த நிலையினை பெற்றோரும், உறவினர்களும் அன்று ஆதரித்தனர்.. விளைவோ.. காலம் கடக்க கடக்க பெற்றோரும் தங்களை பராமரிக்கும் ஆயாக்களாகவும் (அம்மக்கள்), தங்களுக்கு தேவையான நேரத்தில் தேவையான பணத்தைக் கொடுக்கும் ஏ டீ எம் களாகவும் (அப்பாக்கள்) இன்றைய நிலையில் உள்ளனர்.

உணவு, உடை, அறிவுரை என எல்லாவற்றிலும் தங்களுக்கு பிடிக்காத ஒன்றையே அவர்கள் அளிக்கின்றனர் என்ற எண்ணத்துடன் பெற்றோரைக் கண்டாலே முக்கால்வாசி குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வெறுப்புதான் மேலோங்குகிறது.

இவை அனைத்தும் இன்று தொடங்கவில்லை, என்றோ உணவிலும், பாசத்திலும் பெருமையாக பெற்றோர்கள் அவர்களின் வளர்ப்பில் நினைக்க இன்று வந்தது வினை. இந்த நிலை இன்று வெளிநாட்டு குழந்தைகளிடம் மட்டும் இல்லை, நம்ம ஊர் குழந்தைகளிடமும் மேலோங்கியுள்ளது.

இன்று நம் குழந்தைகளுக்கும் நாம் உண்ணும் உணவுகள் எங்கிருந்து வருகிறது என்று தெரிவதில்லை. அரிசியாக இருந்தாலும் சரி, வெண்டைக்கையாக இருந்தாலும் சரி அவை எங்கிருந்து, எவ்வாறு, எத்தனை காலம், எதனைக் கொண்டு பெறப்படுகிறது என்று பலருக்கும் தெரிவதில்லை.

இவையே இன்றைய நோய்களுக்கும், உடல் உபாதைகளுக்கும் மிக முக்கியமான காரணமாகவும் உள்ளது. அறிவியல், வளர்ச்சி என்ற பெயரில் வேறு இவை அனைத்தும் மறுபட்டுள்ள நிலையில் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கே அவற்றின் ஆணிவேர் இன்று புலப்படுவதில்லை.

இவை காணாமல் போவதால் யாருக்கும் பெரிய நஷ்டம் இல்லைதான் என்றாலும், நமது அடையாளங்களையும், நமது பாரம்பரியத்தையும் நாம் இழப்பது உறுதியாகிறது. நமது அடையாளங்களை இழந்துவிட்டபின் நமக்கான மரியாதையும் தன்னால் போய்விடும் என்ற முன்னோக்கு சிந்தனைகூட இல்லாத அளவு இன்று நாம் மழுங்கிப்போய் உள்ளோம்.

நமது அடையாளங்கள் இல்லாமல் நமது வருங்கால சந்ததிகளின் நிலைமை அனாதைகள், அகதிகள் போலத்தான். இன்றே சொந்த விளை நிலங்கள், தேவைக்கு சொந்தமாக கால்நடைகள் இல்லை, எல்லாவற்றிற்கும் மற்றொருவரை நாடவேண்டிய நிலை. மேலும் இவற்றை இழந்ததினால் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் அதிகமாகிறதே தவிர நோய்கள் என்னவோ குறைந்தபாடில்லை. 

அடையாளங்களை மட்டும் நாம் இலக்கவில்லை நமது உணவைக்கண்டாலே ஒருவித பயமும் இன்று பலருக்கு உள்ளது. நமக்கும், நமது மரபியலுக்கும் பழக்கப்பட்ட உணவுகள் இன்று பலருக்கு ஏற்புடையதாக இல்லை என்று நினைக்கும் அளவிற்கு இன்று தள்ளப்பட்டுள்ளோம். இதனால் உடலும் மனதும் பலவிதமான தொந்தரவுகளுக்கு ஆளாகின்றனர்.  

நெய்யில்லா உண்டி பாழ்

நெய் என்றதுமே பலருக்கு அடிவயிற்றைக் கலக்கும் அளவிற்கு பயம் மேலோங்கியுள்ளது. சுவைக்காக தான் நெய் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர் என்ற தவறான நிலையும் உள்ளது.
நெய்யில்லா உண்டி பாழ்‘ என்பது சித்தர்கள் கூற்று.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து உணவாக இருந்தாலும் சரி, மருந்தாக இருந்தாலும் சரி, ஆயுர்வேதமாக இருந்தாலும் சரி நெய் அவற்றில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. மருத்துவக் குணம் அதிகம் கொண்ட மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை எளிதில்  ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதாலும், உடலுக்கு பல நன்மைகளையும், எளிதில் உடலில் உள்ள செல்களில் ஊடுருவும் தன்மையும் கொண்டிருந்ததால் நெய்யினை நமது முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தினர்.

நெய்யில் பல மருத்துவகுணங்கள் உள்ளது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் ஆற்றல் நமது நெய்க்கு உள்ளது. வைட்டமின் எ, டி, ஈ, கே ஆகியவை நெய்யில் உள்ளதால் உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி  உடலில் எளிதில் சேர்வதற்கும் உதவுகிறது. உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதனை தடுக்கும் கொழுப்பு சத்துக்கள் இதில் உள்ளது. சீரான ஜீரணத்திற்கு மாமருந்தாக அமைகிறது.

எலும்பு பலகீனம், மூட்டு வலி, சதை பிடிப்பு போன்றவை நெய்யினை உணவில் சேர்ப்பதால் சீராகிறது. நெய்யில் இருக்கும் ஒருவகையான லினோலிக் அமிலம் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளதுடன், உடல் பருமனையும் தடுக்கிறது.

நெய்யினை தொடர்ந்து உண்பதால் மலச்சிக்கல் சீராகும், ஞாபகசக்தி அதிகரிக்கும், கண் பார்வை அதிகரிக்கும், மேனி பளபளக்கும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் குடல் புண் மறையும். குழந்தைகள் தொடர்ந்து நெய்யினை உண்ண அவர்களின் மூளை வலுப்பெறுவதுடன், சுறுசுறுப்பையும் அளிக்கிறது.

இவ்வளவு நன்மைகள் நெய்யில் உள்ளது என்பது உண்மைதான். அதிலும் இரத்தக் கொதிப்பு, இரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு மாமருந்தாகவும் நமது நெய் உள்ளது. இவ்வளவு நன்மைகள் நெய்யில் இருக்க பின் எதனால் இன்று நெய்யைக்கண்டாலே நம்மவர்கள் பயப்படுகின்றனர் என்று சற்று சிந்தித்தாலே முன் குறிப்பிட்டு இருந்த உணவும், நமது அடையாளங்களும் மாறியது விளங்கும். 

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் நிகழ்விற்கு முன் இத்தனை வருடங்கள் ஏதோ ஊரில் வயதானவர்களும், வேலையில்லாதவர்களும் புலம்பிய ஒன்றுதான் நமது நாட்டு மாட்டு இனங்களின் அழிவுகள்.

எங்கிருந்து பால் வருகிறது என்ற கேள்விக்கு குழந்தைகள் இல்லை பெரியவர்களும் சரியான பதிலைக் கூறமுடியாத நிலைதான் அது. கடந்த இருபது ஆண்டுகாலமாக நமது ஊர்களில் இருந்த நமது இன நாட்டு மாடுகள் பெரிதாக யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் மெல்ல மெல்ல அழிவைநோக்கி நகர்ந்தது.

இதற்கு காரணம் அவை கொடுக்கும் பாலின் அளவு என்று பலர் நம்பினார். ஆனால் குறைந்த அளவிலேயே கிடைத்தாலும் அந்த பாலில் உள்ள மருத்துவ குணத்தையும், ஏ2 புரதத்தையும் யாரும் கணக்கிடவில்லை. 

வணிகமயம், தொழில்மயமாக்கல், அவசர உலகம் போன்ற காரணங்களால் பாலின் தேவை செயற்கையாக மக்களின் மத்தியில் அதிகரிக்கப்பட்டது. இதனை ஈடுகட்ட நமது நாட்டு மாடுகளால் முடியாது என்று பல வெளிநாட்டு இன மாடுகளை இந்தியா இறக்குமதிசெய்தது.

பசுமாட்டினை தெய்வமாகவும், உறவாகவும் கருதி பேணிப் பாதுகாத்த நம்மவர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. ஒருவேளைக்கு அதிக பால் கிடைக்கும் என்ற ஆசைவார்த்தையால் பலரும் நமது நாட்டு இன மாடுகளை புறக்கணித்தனர். அதுமட்டுமல்லாது இந்த நவீன சீமை மாடுகள் மேலும் அதிக அளவில் பாலினைக் கொடுக்க அதற்கு பலவிதமான ஊசிகளும் கொடுக்கப்படுகிறது. 

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தினால் நாட்டு இன மாடுகளை பற்றிய விழிப்புணர்வு பெருகியது, அதாவது நமது பசுக்களும், காளைகளும் அழிகிறது… இது மட்டுமல்லாது பலபல புது நோய்களுக்கும் இந்த கலப்பின அல்லது வெளிநாட்டின மாடுகள் காரணங்களாக இருக்கிறது என்பதனை யாரும் புரிந்துகொள்ளவில்லை.

அயல் நாட்டு சீமை மாடுகள் பாலினைக் கொடுத்தாலும் அவற்றிற்கும் நமது நாட்டு இன பசு மாடுகள் கொடுக்கும் பாலின் மூலக்கூற்றிற்கும் அதிக வேறுபாடுகள் உள்ளது. வெளிநாடுகளில் இவற்றை ஏ1 பால், ஏ2 பால் என்று வகைப்படுத்தி விற்கின்றனர். ஏ2 மூலக்கூறுடைய நமது நாட்டு இன பசுக்களில் இருந்து கிடைக்கும் பால் பல வகையில் மனிதர்களுக்கு நோய்தீர்க்கும் மருந்தாக உள்ளது. 

இந்த ஏ2 நாட்டு இன பசு மாடுகளில் இருந்து பெறப்படும் நெய்க்குத்தான் முன்னர் கூறிய அனைத்து மருத்துவகுணங்களுமே தவிர வெறும் நெய் அல்லது இந்த சீமை மாட்டிலிருந்து கிடைக்கும் நெய்க்கு கிடையாது.

இந்த வேறுபாட்டினை உணராமல் அல்லது தெரிந்து கொள்ளாமல் ஏதோ நெய் என்று பயன்படுத்தினால் வரப்போகும் விளைவுகள் முற்றிலும் எதிர்மறையானது. அதாவது உடலை பெருக்கும், இரத்த அழுத்தத்திற்கும், மாரடைப்பிற்கும் வித்திடும், எலும்புகள், தசைகளுக்கு பாதிப்பினைக்  கொடுக்கும். ஆக முதலில் எந்த விலங்கிலிருந்து பாலும், நெய்யும் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டு நெய்யினை உபயோகிக்கவேண்டும்.

அடுத்ததாக நெய் என்பது என்ன என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். காரணம் இன்று நெய் என்ற பெயரில் பாலடைக் கட்டிகள் உருக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதுவும் உண்மையில் நெய்யாகாது. அதாவது நெய்யிற்கான மருத்துவகுணங்களைக் கொண்டதாக அமையாது.

நெய்யென்பது நமது நாட்டு இன பசுவிலிருந்து கிடைக்கும் பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த பசுந்தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். இதுதான் உண்மையில் நெய் அதாவது பசு நெய் (ஏ2 நெய்).

இந்த நாட்டு பசுவின் நெய்க்கு தான் முதலில் கூறிய அனைத்து மருத்துவகுணங்களும் உண்டு. அதுவும் இந்த நெய்யினை ஒவ்வொருநாளும் உணவில் தவறாமல் சேர்த்துக்கொண்டால் எந்த நோய் நொடியும் நம்மை அண்டாது. இளமையும், சுறுசுறுப்பும் ஊஞ்சலாடும்.

எவ்வாறு இந்த நெய்யினை நமது உணவில் சேர்த்துக்கொள்வது என்பதனையும் நமது முன்னோர்கள் மிக அழகாக கூறியுள்ளனர். 
“மோர் பெருக்கி நெய் உருக்கி” என்று கூறியுள்ளனர். அதாவது நெய்யினை உண்ணுவதற்கு முன் அதனை வெப்பத்திலிட்டு உருக்கி பின் சூடு சாதத்திலோ அல்லது இட்லி தோசை போன்ற சூடான பலகாரத்திலோ சேர்த்து உண்ணவேண்டும். இவ்வாறு உண்ண நோய்கள் அண்டாது. 

உடல் ஆரோக்கியத்தை காக்கும் நமது பாரம்பரியத்தைப் பற்றியும் நமது உணவைப்பற்றியும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வது நமது கடமை. உணவு எங்கிருந்து வருகிறது, ஆவற்றை எவ்வாறு விளைவிப்பது என்பதையும் நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம்.

https://www.youtube.com/watch?v=K-munBB81n4
(1 vote)