சாறுகளில் இதனை வகைகள்

இயற்கை சாறுகள் என்றால் என்ன, எது அருந்தக்கூடிய சாறுகள் என தெரிந்துக் கொள்ள இயற்கை சாறுகள் என்ற பதிவை பார்க்க சாறுகளைப் பற்றிய முக்கியத்துவம், உயிர் சத்துக்கள் நிறைந்த சாறுகள், காரத்தன்மை, எந்த காலத்தில் என்ன சாறு அருந்த வேண்டும், எவ்வாறு சாறு தயாரிப்பது என பலவற்றை பார்க்கலாம்.

நம்மை சுற்றி, நம் நிலங்களில், நம் தட்ப்ப வெப்ப நிலை, பருவநிலைக்கு ஏற்றர்ப்போல் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை சாறுகளை தயாரித்த 20 முதல் 30 நிமிடத்திற்குள் பருகவேண்டும். இல்லையானால் அதில் உள்ள சத்துக்கள் அழிய தொடங்கிவிடும். செடி, கொடி, இலை, காய், கனிகளுக்கேற்ப சாறு எடுக்கும் முறைகள் மாறும். கசக்கி, இடித்து, அரைத்து, பிழிந்து, ஊறவைத்து என பலவகைகளில் சாறுகளை எடுக்கலாம்.   

குடிநீர் திருவிழா

இவற்றின் பலனை அனுபவித்திருந்த நம் முன்னோர் இதனை தொடர்ந்து பருக பலவழிகளை கையாண்டனர். அதில் ஒன்று தென்மாவட்டங்களான திருநெல்வேலியில் ஒரு குடிநீர் திருவிழாவே கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆடிமாதம் வரும் அமாவாசையன்று இந்த திருவிழா ஒரு ஊர்திருவிழாவாகவும் உள்ளது.

மலைகள், காடுகள், மூலிகைகள், இலை, தழைகள், மரப்பட்டைகள், ஆறுகள் என்று இயற்கை கொஞ்சி விளையாடும் இடங்களில் இருந்து பல மூலிகைகளை ஊர் மக்கள் ஒன்றுக்கூடி சாக்கு மூடியில் கொண்டுவர, கிருமிகள் அதிகம் பரவும் ஆடிமாதம் அவற்றினைக்கொண்டு ஒரு குடிநீரைத் தயாரிக்கின்றனர். ஆயிரக்கணக்கான மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படும் இதனை வருடம் ஒருமுறையேனும் பருக உடல் நச்சுக்கள் நீங்க நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். 

இவ்வாறு திருவிழாக்களை கொண்டாடவில்லையனாலும் ஒவ்வொரு சாறுகளை ஒவ்வொரு நாள் என்று நாம் அருந்தலாம். இவ்வாறு அருந்திவர எப்பேர்ப்பட்ட கதிர்வீச்சுகளில் இருந்தும், இராசயனங்களில், மாறுபட்ட உணவுகளில் இருந்தும் நம்மை காத்துக்கொள்ளலாம். இதுவே நம் முன்னோர் பின்பற்றிய இரகசியம். 

வீட்டில் செய்யக்கூடிய சாறுகள்

ஒருநாள் கருவேப்பிலை சாறு, மறுநாள் கொத்தமல்லி சாறு, மறுநாள் புதினா சாறு, பூசணி சாறு, வாழைத்தண்டு சாறு, ஆவாரம் பூ சாறு, முடக்கறுத்தான் சாறு, வெற்றிலை சாறு, முள்ளங்கி சாறு, எலுமிச்சை சாறு, இளநீர், கரும்பு சாறு, அருகம்புல் சாறு, நெல்லிக்காய் சாறு, நித்தியக்கல்யாணி சாறு, கற்றாழை சாறு, கீழாநெல்லி சாறு, துளசி சாறு, வில்வம் சாறு, செம்பருத்தி சாறு, கற்பூரவல்லி சாறு, பொன்னாங்கண்ணி சாறு, கரிசிலாங்கண்ணி சாறு, சீரக சாறு, நெருஞ்சில் சாறு, கல்யாண முருங்கை சாறு, குப்பைமேனி சாறு, மணத்தக்காளி சாறு, திருநீற்றுப்பச்சிலை சாறு, இஞ்சி சாறு, தூதுவளை சாறு, பீட்ரூட் சாறு, வல்லாரை சாறு, வெட்டிவேர் சாறு, நன்னாரி சாறு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை அருந்த புத்துணர்வும் ஆரோக்கியமும் நம்மிடம் தவழும். 

இவற்றில் கொத்தமல்லி, புதினா, ஆவாரம் பூ போன்று லேசான இலைகளை கொண்டவற்றை கசக்கி பிழிந்து நீர் சேர்த்தும், கீழாநெல்லி, நெல்லிக்காய், அருகம்புல், முடக்கறுத்தான், கருவேப்பிலை, வெற்றிலை போன்றவற்றை இடித்து பிழிந்து நீர் சேர்த்தும், பூசணி, வாழைத்தண்டு, முள்ளங்கி போன்றவற்றை அரைத்து பிழிந்து நீர் சேர்த்தும், சீரகம், வெட்டிவேர், நன்னாரி போன்றவற்றை ஊறவைத்தும் பருகலாம். 

“அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பதிற்கு இணங்க ஒரே இயற்கை சாறை தொடர்ந்து பருகாமல் இவ்வாறு பலவற்றை பருக நலம் பெருகும். மருந்து உணவாகவும், உணவு மருந்தாகவும் பலனளிக்கும். இவற்றில் பல நம்வீட்டருகிலேயே எங்கும் தேடாமல் பெறலாம். ஒவ்வொன்றும் பல பலன்களை அளிக்க ஒட்டுமொத்த உடலும் பலம்பெறும். எந்த செலவும், அலைச்சலும் இன்றி எதிர்காலத்தையும் நம் குழந்தைகளையும் சமாளிக்க எளிய வழி இந்த தரவ உணவுகளான மூலிகை சாறுகள். 

(3 votes)