சாதிக்காய் – நம் மூலிகை அறிவோம்

Myristica Fragrans; Nutmeg; ஜாதிக்காய்

கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு தெரிந்த சில மூலிகைகளில் ஒன்று இந்த ஜாதிக்காய் என்ற சாதிக்காய். சருமத்தில் வரும் பருக்கள், கட்டிகளுக்கு இயற்கை முறையில் சிறந்த நிவாரணத்தை அளிக்கும் தன்மையைக் கொண்டது இந்த சாதிக்காய் என்பதால் இளம் பெண்கள் மத்தியில் இது பிரபலம். ஜாதிக்காய், சாதிக்காய், குழக்காய் என பல வேறு பெயர்கள் இந்த மூலிகைக்கு உண்டு.

தனி இலைகள் மாற்றிலைகளாகக் கொண்ட மரம் இந்த சாதிக்காய் மரம். இந்த மரத்தில் ஆண் பூக்கள், பெண் பூக்கள் என தனித்தனியாக பூக்கள் இலைக்கோணத்தில் காணப்படும். இதன் கனிகள் பழுப்பு நிறத்தில் மெலிதான ஓட்டைக் கொண்டு மூடப்பட்டு சதைப்பற்றுள்ள உருண்டை வடிவ கனிகளாக இருக்கும். இது நல்ல மணத்துடன் இருக்கும். சாதிக்காயின் குணங்களும், ஜாதிப்பத்திரியின் குணங்களும் ஒரேயாகும்.

கார்ப்பு கலந்த துவர்ப்பு சுவைக் கொண்ட இந்த ஜாதிக்காய் கனிகள் தான் மருத்துவத்தில் பயன்படுகின்றன. நறுமணம் மிக்க இந்த காயிலிருந்து ஜாதிக்காய் நறுமண எண்ணெயும் பெறப்படுகிறது. இவை ஆண்மையைப் பெருக்கவும், காமத்தைப் பெருக்கவும் உதவுகிறது. உணவுகளுக்கு மணமூட்டியாகவும் உள்ளது.

ஜாதிக்காய் உடலுக்கு சிறந்த பலத்தையும் ஜீரண சக்தியை அளிக்கும் தன்மையும் கொண்டது. உடலின் வெப்பத்தை நீக்கக் கூடியதாவும் உள்ளது. மேலும் வயிற்றுப் பொருமல், பல்வலி, பெருங்கழிச்சல், பார்வைக் குறைவு, வயிற்றுவலி, வாய்வு, தலைவலி, இருமல், நீர்வேட்கை போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த பலனை அளிக்கும்.

பல நோய்களுக்கு

சாதிக்காய் பொடி அரை சிட்டிகை அளவு பாலில் கலந்து தினமும் 3 வேளை எடுத்துவர வயிற்றுப்போக்கு, இரைப்பை, கல்லீரல் நோய்கள், நடுக்கம், பக்க வாதம் போன்றவை மறையும். உடல் வெப்பம் நீங்கும். விந்து இறுகும். ஆண்மை பெருகும், சோர்வு நீக்கி புத்துணர்ச்சி அதிகரிக்கும். இரவு இவ்வாறு குடிக்க நல்ல தூக்கம் வரும். தூக்கமின்மை மறையும்.

பற்களுக்கு

சாதிக்காய் எண்ணெயை பற்களில் தடவ பல்வலி நீங்கும்.

கண்களுக்கு

சாதிக்காயை அரைத்து கண்ணைச் சுற்றிப் பற்றிடக் கருவளையம் மறையும், கண் ஒளி பெறும்.

ஜீரண சக்தியை அதிரிக்க

சீரகம் மூன்று பங்குடன் சாதிக்காய், சுக்கு ஆகியவை ஒரு பங்கு என எடுத்து இவற்றை நன்கு காயவைத்து பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் காலையிலும், மாலையிலும் இதனில் இரண்டு சிட்டிகை அளவு எடுத்து உணவிற்கு முன் எடுத்து வர வயிற்றில் உண்டாகும் வாயுவைப் போக்கி ஜீரண சக்தியை அதிரிக்கும்.

(1 vote)