Mappillai Samba Rice Health Benefits

மர நெல் – நம் பாரம்பரிய அரிசி

பாரம்பரிய அரிசி ரகங்களில் விவசாயிகளுக்கு உகந்த ஒரு சிறந்த பாரம்பரிய அரிசி இந்த மர நெல். விவசாயம் செய்யும் பலருக்கும் இருக்கும் ஒரு பெரிய சவால் பருவநிலை மாற்றம். பருவம் தவறிய மழை, வெள்ளம், வறட்சி போன்றவற்றை ஒட்டு ரக குட்டை அரிசிகள் தாங்காது. அதிக மழை அதனால் நிலத்தில் வடியாமல் தண்ணீர் தேங்குவது நெல் பயிரை அழுகச் செய்யும், அதேப்போல் வெள்ளத்தால் பயிர்கள் சாய்வதும், அதிக வெள்ளத்தில் முற்றிய நெல்மணிகள் மீண்டும் முளைப்பதும் என விவசாயிகளுக்கு அதிக இழப்பை ஏற்படுத்தும். மேலும் அதிக வறட்சி, பூச்சி, நோய் தாக்குதல் என சவால்கள் அதிகளவில் இருக்க இவற்றிலிருந்து வேறுபட்ட ஒரு ரகமாக மர நெல் உள்ளது.

மரம் போல பயிர்கள் இருப்பதால் மர நெல் என இந்த நெல்லுக்கு பெயர். அதிக வெள்ளம், மழையிலும் சாயாமல் உறுதியாக இருக்கும் நமது மரபு நெல் ரகம். இதன் நெல்மணிகள் அழுத்தமாக இருக்கும் தன்மை கொண்டது.

வட தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அதிகமாக காணப்படும் பாரம்பரிய நெல் ரகமாக இந்த மர நெல் உள்ளது.

பொதுவாக காலம் தவறிய அதிக மழை, அதாவது அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அதிக மழையாலும், வெள்ளத்தாலும் பயிர்கள் பாதிக்கப்பட்டாலும், குறைவாக மட்டுமே சாயும் தன்மைக் கொண்ட இந்த மர நெல் பெரு வெள்ளத்தில் நீரில் மூழ்கினாலும் கடினமான விதையுறை கொண்ட இந்த மர நெல் முளைக்காது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சியாக நீர் வடிந்தப்பின் அறுவடை செய்யலாம்.

அறுவடை செய்த நெல்லும் நீரில் மூழ்கினாலும் உடனடியாக முளைக்காத்து விவசாயிகளுக்கு லாபத்தை அளிக்கும். அதனால் வட தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் டெல்டா விவசாயிகளும் இதனை பயன்படுத்திக் கொள்ள நல்ல லாபத்தை அளிக்கும். கடினமான விதையுறை கொண்ட இந்த மர நெல் பூச்சி நோய் தாக்குதல் இன்றி வளரக் கூடியது.

நூற்றி இருபது முதல் நூற்றி இருபத்தி ஐந்து நாட்கள் வயதுடைய இந்த மர நெல்நான்கடி உயரம் வளரும் தன்மை கொண்டது. பின் சம்பா பட்டமான புரட்டாசி தொடங்கி தை வரையிலான பட்டத்தில் இதனை பயிரிட ஏற்றது. நாற்று விட்டு நட சிறந்தது. இந்த மர நெல் சிவப்பு நிற அரிசியைக் கொண்ட பாரம்பரிய அரிசி. நல்ல கடினமான மோட்ட ரக அரிசி.

சாதமாக வடித்து உட்கொள்ள உகந்த அரிசியான இந்த மரநெல் இட்லி, தோசை, புட்டு போன்ற பலகாரங்களுக்கும் ஏற்றது. மர நெல் அரிசியில் தயாரிக்கும் உணவுகளை உண்பதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும், உடலுக்கு வலிமையை அளிக்கும், செரிமான கோளாறுகளை அகற்றும் தன்மையும் கொண்ட அரிசி. உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்கள் உட்கொள்ள நல்ல பலனைப் பெறலாம்.

(1 vote)