இயற்கை உணவு – நவீன உணவு

மிளகுக்கும் பப்பாளி விதைக்கும் உள்ள வேறுபாடு தான் இயற்கை உணவிற்கும் நவீன உணவிற்கும் உள்ள வேறுபாடு…

பளபளக்கும் சாலைகள், தூசும் குப்பையுமில்லா தெருக்கள், ஜொலி ஜொலிக்கும் வண்ண விளக்குகள், வானுயர்ந்த கட்டிடங்கள், பலமாடி குடியிருப்புகள், திரும்பும் இடமெல்லாம் வண்ண வண்ண மலர் செடிகள் இவை அனைத்தையும் கண்டவுடனே கூறிவிடலாம் அது ஒரு வளர்ந்த நாகரிக நாடு அல்லது நகரம் என்று.

இன்றைய நவநாகரிக நகரங்கள் பல இவ்வாறே காட்சியளிக்கிறது. ஒரு நகரத்திற்கும் மற்றொரு நகரத்திற்கும் வேறுபாடே கூற முடியாத அளவு ஒற்றுமையுடன் ஒவ்வொன்றும் காட்சியளிக்கிறது.

வாழ மட்டுமே தகுதியுள்ள இந்த அழகான, நாகரிகமான நகரங்களில், நாடுகளில் உள்ளவர்கள் தங்களுக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைத்தவுடனேயே வேறு இடங்களுக்கு பறந்து விடுவதைக் காண்கிறோம்.

காரணம் அவற்றில் உள்ள அழகு மன நிறைவைத் தருவதில்லை. விடுமுறைக்கு செல்பவர்களும் பெரும்பாலும் அவர்கள் தற்போது வாழும் அதிநவீன வளர்ச்சி பெற்ற பிற நாடுகளுக்கு செல்வதை விரும்புவதில்லை. அவர்களின் விருப்பங்கள் பாரம்பரியமிக்க பழமையான இடங்களையும், இயற்கையையும் நோக்கியே நகர்கிறது. 

எகிப்தின் பிரமிடுகள், சீனப் பெருஞ்சுவர், கம்போடிய அங்கூர் வாட், மலேசியா பினாங், பங்களாதேஷின் சுந்தரவனக்காடுகள், பெருவின் மச்சுபிச்சு, இலங்கையின் அனுராதபுரம், சோழர் காலத்து கோவில்கள், மாமல்லபுரத்து மரபு கோவில்கள், தாஜ்மஹால் என்று பாரம்பரியம் சொல்லும் இடங்கள் ஏராளம். அவ்வாறான  இடங்களுக்கு செல்லவே விரும்புகின்றனர். 

நவீனம் வளர்ந்தாலும்

என்ன தான் இந்த இடங்கள் சொல்லவருகிறது. நவீனம் வளர்ந்தாலும் ஏன் இன்னமும் இந்த இடங்களுக்கு மக்கள் அதிகம் வருகைத் தருகின்றனர். 

ஆம்,  அடையாளங்களை அறிந்துக்கொள்ளும் ஆவல் அனைவரிடமும் மேலோங்கி உள்ளது.   

உலகில் வாழ்ந்த முன்னோர்களின் வாழ்வியல் முறைகள், வழிபாட்டு இடங்கள், கட்டிடங்கள், கலைகள், அறிவியல் என அனைத்தையும் தெரிந்துகொள்ளும் ஆவலும், அதில் உள்ள சூட்சும அறிவியல் உண்மைகளையும் தெரிந்து கொள்ளும் ஆவலும் அவர்களை அழைக்கிறது.

உதாரணத்திற்கு, வெப்பம் மிகுந்த துபாயில் உள்ள அருங்காட்சியகத்தில் முந்தைய மக்கள் அவர்களின் பாரம்பரியம் முறையான குளிர்காற்றை அறைக்குள் இயற்கையாக எவ்வாறு வரவழைத்தனர் என்ற தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

இவ்வாறான பல தொழில் நுட்பங்கள் இன்று செயல் பாட்டில் இல்லை என்றாலும் அவற்றின் நுட்பத்தைக் கொண்டே இன்றைய வளர்ச்சி சாத்தியமானது என்பதை மறந்து விடக்கூடாது. இன்றைய வளர்ச்சிக்கு வித்திட்டவர்கள் இவ்வாறான நுட்பங்களினால் மட்டுமே உண்மையில் இன்றைய குழந்தைகள் தங்களின் வாழ்வை எவ்வாறு திட்டமிட்டு ஒவ்வொன்றையும் சிறப்பாக செயல்படுத்துவது என்ற செயல் திறனை வளர்த்துக்கொள்ள முடியும். 

ராஜ ராஜ சோழன் கட்டிய தஞ்சை கோயிலின் திட்ட மேலாண்மையை கண்டு வியக்கும் மேலாண்மை மாணவர்களுக்கு அவற்றின் முழு அனுபவத்தையும் தங்களின் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கொடுப்பதில்லை. 

பாரம்பரியம்

பாரம்பரியம், பாரம்பரியம் என்று சொல்வதெல்லாம் எதோ பழையது என்பவர்களுக்கு இந்த நொடியும் நாளைய பழையது என்பது மறந்து விடுகிறது. ஐசக் நியூட்டனும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் கொடுத்த கோட்பாடுகளும் நம் அதிநவீன குழந்தைகள் படிக்கும் பழைய கோட்பாடுகள் தான். அவர்கள் வகுத்து கொடுத்தது கோட்பாடுகளும், சமன்பாடுகளும். 

இந்தியர்களோ தங்களின் கண்டுபிடிப்புகளை விதிமுறைகளாகவும், கோட்பாடுகளாகவும் கொடுக்காமல் பாமரன் முதல் பரமன் வரை அனைவரும் பயன்படுத்தி பலனை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அறிவியல் கலந்த அவற்றை கலையாகவும், சிலையாகவும், பழக்கங்களாகவும், வழக்கங்களாகவும், சமையலாகவும், உணவாகவும் வகுத்து வகைப்படுத்தினர். 

இவை எதுவும் பழையது இல்லை நம் பாரம்பரியம்! பழையது என்பது பயன்பாடு இல்லாமல் கிடப்பில் போடப்படுவது. பாரம்பரியம் என்பது வழிவழியாக தொடர்ந்து வருவது. 

இந்தியர்களின் ஒவ்வொரு செயலும் ஒரு பெரிய தத்துவத்தை கூறுவதாகும். ஒவ்வொன்றும் பாரம்பரியத்தையும் ஆரோக்கியத்தையும் மேன்மையையும் பறைசாற்றும் தன்மை கொண்டது.

பாரம்பரியத்தில் சிறந்த நமக்கு பாரம்பரிய உணவுகளின் சிறப்பு இன்று தெரியாமல் போய்விட்டது. சமீபகாலமாக நம் பாரம்பரியத்தை மறந்து அவை ஏதோ நடைமுறைக்கு ஒத்துவராதது, மாடர்ன் இல்லை, சமூக அந்தஸ்து என்ற பெயர்களில் மூடத்தனமாக நினைக்கத் தொடங்கியுள்ளோம். 

இந்தியர்கள், நம் தாத்தாவும் பாட்டியும் உண்டு உலகிற்கு கற்றுக்கொடுத்த பாரம்பரிய உணவுகளே இன்றைய நவ நாகரிக ‘Organic Foods’ ஆகவும் இயற்கை உணவுகளாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரியாமல் இருக்கிறோம்.

மிளகு – பப்பாளி

மிளகுக்கும் பப்பாளி விதைக்கும் உள்ள வேறுபாடு தெரியாத நிலை இன்று உருவாகியுள்ளது. இரண்டும் பார்க்க ஒன்றைப்போல் இருப்பதால் இரண்டும் ஒன்று தான் என்கிறோம். 

“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரித்து அறிவதே மெய்” என்ற உண்மையை மறந்து விட்டோம்.

மிளகின் வித்து வேறு, பப்பாளியின் விதை வேறு என்ற உண்மை தெரிந்தவர்களுக்கு மட்டுமே தான் தெரியும் அவை இரண்டும் வேறு வேறு என்று. மற்றவர்களோ அதனை தெரிந்து கொள்ளாமல் பார்க்க மிளகைப்போல் இருக்கும் பப்பாளி விதையை வாங்கிக்கொண்டு கதை பேசுவோம் “இன்று வரும் மிளகு காரமே இல்லாமல் இருக்கிறது, அந்த காலத்தில் மிளகு நல்ல காரமாக இருக்கும்” என்றும்.  

இன்றைய உணவின் நிலை

உண்மையான விதைகளும், அதன் செடிகளும், பயிர்களும் காணாமல் போய்விட்டது. ஏதோ இன்றைய நவநாகரிக மிளகு செடி மிளகைப்போல் காய்க்கும், பார்க்க மிளகு போல் தோற்றமளிக்கும், ஆனால் மிளகிற்கான காரமும், மருத்துவ குணமும் இருக்காது. அதுமட்டுமல்லாது இவ்வாறு விளைந்த மிளகின் விதைகளில் இருந்து மீண்டும் மிளகு செடியையும் மிளகையும் பெறமுடியாது. 

வழிவழியாக வராத உணவுகள் இயற்கை உணவுகளும் இல்லை, Organic Foods சும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பாரம்பரிய உணவுகள் என்பது தான் உண்மையான உணவு, நோய் நீக்கும் உணவு, இயற்கை உணவு.

பார்க்க உணவைப்போல் இருக்கும் இவைகள் இயற்கையானவை இல்லை என்பதுடன் இவற்றை விளைவிக்க பல விதமான இரசாயனங்களையும், பூச்சி கொல்லிகளையும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் பலப்பல புதுப்புது நோய்கள் இயற்கையான மனிதனைத் தாக்குகிறது. 

சரியான விதையிலிருந்து வரும் காய், கனி அதன் உண்மையான சுவை, மணம், (மருத்துவ) குணம், சத்துக்கள் போன்றவற்றை சீராக சிறந்த தன்மையுடன் பெற்றிருக்கும். உணவே மருந்து  மருந்தே உணவு என்ற கோட்பாடைப் பெற்றிருக்கும்.

இப்படி மிளகு மட்டும் தான் மாறிவிட்டதா என்று சற்று உங்களையே கேள்வி கேட்டுப்பாருங்கள். 

நாம் தொலைத்தவை

  • மிருதுவான தோல்கள் கொண்ட புளிப்புத் தக்காளியைக் காணோம்,
  • கசக்கும் பாகற்காயைக் காணோம்,
  • மணக்கும் மல்லியைக் காணோம்,
  • மணக்கும் பச்சை இரத்தமான கீரைகளைக் காணோம்,
  • ஊருக்கே மணக்கும் முருங்கையைக் காணோம்,

  • கார்க்கும் கத்திரியைக் காணோம்,
  • கார்க்கும் முள்ளங்கியைக் காணோம்,
  • கண்களைக் கலங்க வைத்த மா மருந்தான வெங்காயத்தைக் காணோம்,
  • தட்டிப் போட்டு மணந்த பூண்டைக் காணோம்,
  • இனிப்பும் கசப்பும் கலந்த தேனைக் காணோம்,
  • இனிக்கும் கரும்பைக் காணோம்,

  • உடலுக்கு திடத்தைக் கொடுக்கும் கேழ்வரகைக் காணோம்,
  • சின்னச் சின்ன மணியாக இருக்கும் சிறு பருப்பைக் (பாசிப் பருப்பு) காணோம்,
  • கசக்கிப் போடும் சீரகத்தைக் காணோம்,
  • சுவைக்கும் வாழைப் பழத்தைக் காணோம்,
  • இனிப்பு, உப்பு, புளிப்பு கலந்த சாத்துக்குடி, கமலா ஆரஞ்சை காணோம்,

  • மருத்துவ குணம் கொண்ட நல்லெண்ணெய்யைக் காணோம்,
  • கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத கடுகைக் காணோம்,
  • இரத்த சோகையைப் போக்கும் இனிப்பு கருப்பட்டியை காணோம்,
  • சத்துக்களின் ஊட்டச்சத்து ராணியான பாரம்பரிய அரிசியைக் காணோம்… இப்படி உண்மைத் தன்மை கொண்ட உணவுகள் காணமல் போனதுடன் மறந்து போய்விட்டது. 

செயற்கை மணம், சுவைக்கு அடிமைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறோம். பார்க்க மல்லியைப் போல் இருக்கும் ஆனால் மல்லியின் தன்மைகள் அற்றதாக இருக்கும். மனம், சுவை கூட இல்லாத மல்லியையும் தினம் தினம் மணக்கும் என்ற பொய்யான நம்பிக்கையுடன் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நாமே நம்மை சமதானப் படுத்தியும் கொள்கிறோம். பார்க்க மல்லியைப் போலிருக்கும் இது உண்மையான மல்லி இல்லை என்று புரிந்து கொள்ளாமல்… 

இவ்வாறு நம் முன்னோர்கள் வழிவந்த, நம் மரபணுவிற்கு ஏற்ற, நம் முன்னோர்கள் (தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா) பயன்படுத்திய உணவில் நாம் மறந்தது ஒன்றிரண்டு அல்ல.

மறந்ததால் காணாமல் போனது பல. நமது உணவில் பெரும் பகுதியைப் கொண்ட அரிசியும் அதில் அடக்கம். அரிசியே இன்று வில்லனாக காட்சியளிக்க காரணமும் அது தான். இன்று அரிசி என்றவுடன் உடல் பருமனுக்கு காரணம், சக்கரை வியாதிக்கு காரணம், உடல் அழகின்மைக்கு காரணம் என்று காரணங்களை அடுக்குகிறோம்.

நவீன அறிவியலும், மருத்துவமும் வளராத காலத்தில் வெறும் சோற்றை உண்டு கட்டழகுடன் பத்து பிள்ளைகளைப் பெற்ற நம் தாய்மார்களையும், பாட்டிமார்களையும், முன்னோர்களையும் மறந்து விடமுடியுமா? அவர்கள் பயன்படுத்திய அரிசியில் என்ன இருந்தது என்று கவனிக்க மறந்து விட்டோம்.  

வழிவழியாக வருவது பாரம்பரியம், அவை ஒவ்வொன்றையும் கோட்பாடுகளுக்கல்லாமல் வாழ்வியலாக கொடுத்துள்ளனர். அரிசி என்றவுடன் அரிசியின் விதை நெல்லில் இருந்து அரிசி, பயிர், பின் மீண்டும் அதிலிருந்து விதை, பின் பயிர், அரிசி என சுழற்சியுடன் பாரம்பரியத்தை நமது உணவாகவும், மருந்தாகவும் கொடுத்துள்ளனர். இந்த நமது பாரம்பரியத்தைத் தேடியே பல நாட்டவரும் இங்கு வருகின்றனர். அவர்களுக்கு நம் பெருமைகளை எடுத்துரைப்போம். 

(1 vote)

2 thoughts on “இயற்கை உணவு – நவீன உணவு

  1. Kasim

    நன்றி. மிகவும் பயனுள்ள பதிவு

Comments are closed.