பாரம்பரிய அரிசி – கேள்வி பதில்

அரிசி நல்லதா? இல்லையா?

அரிசியில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் குறிப்பாக புரதம், வைட்டமின், தாது மற்றும் கொழுப்பு சத்துக்களும் உள்ளது. அதனால் அரிசி தமிழர்களுக்கான சிறந்த ஆரோக்கியமான உணவு. அரிசியில் இருக்கும் சத்துக்களை நீக்கி பட்டை தீட்டும் போது அரிசி வெறும் மாவு சத்துக்கள் மட்டும் இருக்கும் உணவாகிறது. இதுவே உடலுக்கு ஏற்றதல்ல.

பாரம்பரிய அரிசி என்றால் என்ன?

நமது முன்னோர்களால் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தப்பட்ட அரிசியே பாரம்பரிய அரிசி ஆகும். இன்று பலருக்கும் அரிசி என்றால் பட்டை தீட்டப்பட்ட வெள்ளை நிறத்தில் இருக்கும் அரிசி மட்டுமே தெரியும். இவை கடந்த ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் உருவாக்கப் பட்ட அரிசி. இந்த நவீன அரிசிகளில் மாவு சத்தை தவிர வேறு சத்துக்கள் பெரும்பாலும் கிடையாது. அதுவே காலம் காலமாக நமது பரனும் பரையும் உண்ட அரிசியே பாரம்பரிய அரிசி. நமது மரபினர் உண்ட அரிசி என்பதால் மரபு அரிசி, நாட்டு ரக அரிசி என்றும் இதனை அழைப்பதுண்டு.

பாரம்பரிய அரிசி வகைகள் யாவை?

சீரக சம்பா அரிசி, கருப்பு கவுனி அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயானம் அரிசி என நூற்றுக்கும் மேற்பட்ட அரிசிகள் தமிழகத்தில் மட்டுமே உள்ளது.

பாரம்பரிய அரிசிகள் எந்த நிறத்தில் இருக்கும்?

வெள்ளை, கருப்பு, பழுப்பு, சிவப்பு என பல வண்ணங்களில் பாரம்பரிய அரிசிகள் உள்ளது.

எந்த பாரம்பரிய அரிசி ஆரோக்கியத்தை அளிக்கும்?

தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு பாரம்பரிய அரிசிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உள்ளது. பிறந்த குழந்தைக்கு ஒரு அரிசி, வயது வந்த பெண்களுக்கு ஒரு அரிசி, திருமணத்திற்கு தயாராகும் ஆண்களுக்கு ஒரு அரிசி, திருமணமான பெண்களுக்கு ஒரு அரிசி, தாய்மார்களுக்கு ஒரு அரிசி என ஒவ்வொருவரின் வயது, பாலினம், உடல், சூழலுக்கும் ஏற்ப ஒவ்வொரு அரிசியுமே உடல் பலத்தையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் அரிசிகளாக நம் பாரம்பரிய அரிசிகள் உள்ளது.

பாரம்பரிய அரிசியில் என்னென்ன சத்துக்கள் உள்ளது?

பட்டை தீட்டாத அனைத்து வண்ண பாரம்பரிய அரிசிகளிலும் நார்சத்துக்கள், புரதம், வைட்டமின் சத்துக்கள் மற்றும் பல தாது சத்துக்கள் உள்ளது. அதிலும் சிவப்பு நிற மற்றும் கருப்பு நிற அரிசிகளில் புற்றுநோயை தடுக்கும் ஆன்டிஆக்சிடென்ட் உட்பட பல நுண்ணூட்ட சத்துக்களும் உயிர் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

Polished Rice / Unpolished Rice என்றால் என்ன?

நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசி பொதுவாக பழுப்பு வெள்ளை, பழுப்பு (பிரவுன்), சிகப்பு மற்றும் கருப்பு என்ற நான்கு நிறங்களில் உள்ளது. அப்படியே இதனை அதாவது உமியை மட்டும் நீக்கி தவிட்டுடன் இருக்கும் அரிசியே UnPolished Rice அல்லது பட்டை தீட்டப்படாத அரிசி. மேலிருக்கும் இந்த சத்துக்கள் நிறைந்த தவிடு பகுதியை நீக்குவதால் கிடைக்கும் வெள்ளை நிற அரிசியே Polished Rice அல்லது பட்டை தீட்டப்பட்ட அரிசி.

எந்த நிற அரிசி சிறந்தது? Which color rice is healthiest?

வெள்ளை பழுப்பு நிற அரிசியைக் காட்டிலும் பழுப்பு அரிசியும் அதைக் காட்டிலும் சிவப்பு நிற அரிசியும் அதைக்காட்டிலும் கருப்பு நிற அரிசியிலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் கொண்டுள்ள அரிசிகள் இந்தக் கருப்பு அரிசி. 

சிகப்பரிசி அரிசியின் Glycemic Index என்ன?

வெள்ளை நிற அரிசியில் மட்டுமல்லாது சிறிதாக சன்னமாக இருக்கும் அரிசியிலும் Glycemic Index எனப்படும் அளவு அதிகமாக உள்ளது. சற்று மோட்டாவாக நீளமாக இருக்கும் அரிசியின் Glycemic Index குறைவாக உள்ளது.

பாரம்பரிய அரிசியில் உள்ள சத்துக்கள் என்ன?

இயற்கையாகவே நம் பாரம்பரிய அரிசிகளில்
8% புரதமும்,  
5.5% இரும்பு சத்து,
4.9% நார்ச்சத்துக்களும்,
பெரும்பாலான உணவுகளில் இல்லாத போலிக் அமிலம் உட்பட பல வைட்டமின் சத்துக்களையும், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்களையும் கொண்டுள்ளது.

(4 votes)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *